ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

அமெரிக்காவின் அங்கீகரிக்கப் படாத போலி எடைக் குறைப்பு ஊசிகள் கள்ளச்சந்தையில் விற்பனை

மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை தற்போது அமெரிக்காவின் Eli Lilly மருந்து நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் ‘ரெடாட்ருடைடு’ (Retatrutide) என்ற புதிய எடைக் குறைப்பு ஊசி மருந்து, இதுவரை உலகின் எந்தவொரு நாட்டின் மருத்துவ ஒழுங்குமுறை ஆணையத்தாலும் மனிதப் பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படவில்லை.
தற்போது மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனையில் உள்ள இந்த மருந்தின் போலியான வடிவங்கள் ‘Reta’ என்ற பெயரில் பிரித்தானியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடற்பயிற்சிக் கூடங்கள், அழகு நிலையங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இந்த அங்கீகரிக்கப்படாத ஊசிகள் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கண்காணிப்பு இன்றி இத்தகைய ஊசிகளைப் பயன்படுத்துபவர்கள் கடுமையான உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த ஊசிகளைப் பயன்படுத்திய சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், சிலர் சிறுநீரகச் செயலிழப்பு போன்ற தீவிர உடல்நலப் பிரச்சினைகளுக்கும் உள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பிரித்தானிய சுகாதாரத்துறை உரிமம் இன்றி விற்பனை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ‘ரெடாட்ருடைடு’ ஊசிகளைக் கைப்பற்றியதுடன், சட்டவிரோத உற்பத்தி மையங்களையும் முடக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ரெடாட்ருடைடு மருந்து முழுமையான மருத்துவப் பரிசோதனைகளை நிறைவு செய்து, அமெரிக்காவின் FDA மற்றும் பிரித்தானியாவின் MHRA ஆகிய ஒழுங்குமுறை அமைப்புகளின் அதிகாரப்பூர்வ அனுமதியைப் பெற்று சந்தைக்கு வருவதற்கு 2027 முதல் 2028ஆம் ஆண்டு வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்படாத மற்றும் சரிபார்க்கப்படாத எடைக் குறைப்பு ஊசிகளை இணையம் அல்லது கள்ளச்சந்தை ஊடாக வாங்கிப் பயன்படுத்த வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் பொதுமக்களை கடுமையாக எச்சரித்துள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.