ஞாயிறு, 12 மார்ச், 2017

யாழில் கனடாவிலிருந்து சென்ற பெண் கோர விபத்தில் பலி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய பெண்ணொருவர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற திருமதி சர்மிளா விஜயரூபன் (வயது 37) என்பவரே இந்த அனர்த்தம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து நேற்றுமுன்தினம் புளியங்கூடலை நோக்கிப் சென்று கொண்டிருந்த வேளை எதிர்பாராதவிதமாக மண்கும்பான் எல்லையில் விபத்து ஏற்பட்டது. மோட்டார் சைக்கிள், கார், உழவு இயந்திரம் என்பன ஒன்றுடன் ஒன்று மோதியதில்
 விபத்து ஏற்பட்டது.
விபத்தில் படுகாயமடைந்த சர்மிளா விஜயரூபன் யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தள்ளார்.
கனடாவில் வசித்து வரும் திருமதி சர்மிளா விஜயரூபன், தனது தாயாரை சுகயீனம் காரணமாக பார்வையிடுவதற்காக, இரு பிள்ளைகளுடன் தாயகம் வந்திருந்தார்.
உயிரிழந்த சர்மிளா, யாழ் பல்கலைக்கழகத்தில் இரசாயனவியல் பட்டம் பெற்று, லண்டனில் உயர் கல்வி கற்றுள்ளார். பின்னர் குடும்பத்துடன் கனடா சென்று அங்கு குடியுரிமை பெற்றுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 3 மார்ச், 2017

டெங்கு, பன்றிக்காய்ச்சலில்இருந்துதப்பிக்க இலங்கை வாழ் மக்களுக்குஓர் தகவல் !

தற்போது இலங்கையில் நோய்த்தொற்று என்பது வேகமாக பரவி வருகின்றது. டெங்கு, பன்றிக்காய்ச்சல் என இரண்டு நோய்களாலும் மக்களின் உயிர் பறிபோகின்றன.
சிறியவர்கள், பெரியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப்பெண்கள் என யாரையும் இந்த நோய் விட்டு வைப்பதில்லை.
அதனால் நாளுக்கு நாள் பல உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. இவற்றிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்வதற்கு கீழ் தரப்பட்டுள்ள முறைகளை பின்பற்றுங்கள்.
காய்ச்சல் ஏற்பட்ட முதலிரண்டு நாட்களுக்கும் பரசிற்றமோல்(Paracetamol) மாத்திரம் அவரவருடைய வயதுக்கேற்றவாறு பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் வீடுகளிலேயே எடுத்துக் கொள்ளலாம். அல்லது நீங்கள் விரும்பினால் ஆரம்பத்திலேயே வைத்திய ஆலோசனையை நாடலாம்.
காய்ச்சலைக் குறைப்பதற்காக பரசிற்றமோல்(Paracetamol) தவிர்ந்த வேறு எந்தவிதமான மருந்துகளையும் (Aspirin, Ibuprofen, Diclofenac Sodium, Indomethacin) குறிப்பாக குதவழியாக உட்புகுத்தும் மருந்து வகைகளை (Suppository) பயன்படுத்தக் கூடாது.
காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால், கட்டாயம் தமது குடும்ப வைத்தியரை அல்லது அருகிலுள்ள வைத்தியசாலையை நாடி வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் இரத்தப் பரிசோதனை (Basic test – Full Blood Count) மேற்கொள்ளப்பட வேண்டும். அது ஒரு தடவையாகவும் இருக்கலாம் அல்லது பல தடவைகளாகவும் இருக்கலாம். எனினும் முதலிரு நாட்களிலும் இரத்தப் பரிசோதனை அவசியமில்லை.
காய்ச்சல் ஏற்பட்டவுடன் ஓய்வில் இருப்பது அவசியமாகும். பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமலும், பெரியவர்கள் வேலைக்கு செல்லாமலும் ஓய்வெடுப்பது முக்கியமாகும். அத்தோடு, கடுமையான உடற்பயிற்சி மற்றும் வேலைகளை தவிர்ப்பது நல்லது.
போதியளவு நீராகாரம், இளநீர், சூப்புகள், கஞ்சி, ஜீவனி, பழச்சாறுகள், பால் போன்றவற்றை குடிக்க வேண்டும்.
ஆரம்பத்தில் ஓரிரு நாட்களுக்கு காய்ச்சல் இருந்து குறைவடைந்த பின்னரும் குறைந்தது அடுத்த ஏழு அல்லது எட்டு நாட்களுக்கு அவதானமாக இருக்க வேண்டும். தலையிடி, கண் நோவு, பசியின்மை, களைப்பு, வாந்தி, வெளிறிய தன்மை, மயக்கம், தோலில் வெளிறிய புள்ளிகள், முரசினால் இரத்தக்கசிவு, சிறுநீர் மற்றும் மலத்தில் சிவப்பு நிறம் (இரத்தமாக இருக்கலாம்) போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாட வேண்டும்.
சிவப்பு நிற அல்லது பழுப்பு நிறத்திலான
 நீராகாரங்கள், பழங்கள் மற்றும் உணவுப்பொருட்களை எடுப்பதைத் தவிர்க்கவும்.
காய்ச்சல் ஏற்பட்டு அடுத்த பத்து நாட்களுக்கு அல்லது சிகிச்சை முடிந்து வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு வரும் வரைக்கும் பப்பாசிச்சாறு கொடுப்பதைத் தவிர்க்கவும்.
நுளம்புக்கடியிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலமாக ஏனையோருக்கும் பரவுவதைத் தடுக்கலாம்.
இவை எல்லாவற்றையும் விட தமது வீட்டிலும், சுற்றுப்புறச் சூழலிலும் நீர் தேங்கி நிற்காத வண்ணம் பார்த்துக் கொள்வது ஒவ்வொருவரினதும் காலத்தின் கட்டாயக் கடமையாகும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
Blogger இயக்குவது.