வியாழன், 23 நவம்பர், 2017

நவற்கிரி நிலாவரைக்கிணறு பற்றிய உண்மைகள்?

யாழ்   நவற்கிரி  புத்தூர் நிலாவரையில் ஆழம் காணாத ( வற்றா உற்றுநீர் நிலையம்)   நிலாவரைக்கிணறு  பற்றி எமது மக்களிடையே பாரம்பரிய கதைகள் பல வழக்கிலுள்ளன. ‘ ஆழங்காண முடியாத கிணறு இது….’ ‘நிலாவரைக் கிணற்றில் எலுமிச்சம் பழம் 
ஒன்றை போட்டு  அது கீரிமலைக் கேணியில் வந்து மிதந்தது இப்படியாகப் பல கதைகள் மக்கள் வாய்மொழி மூலம் பரப்பப்பட்டு வருகின்றன. அக் கால மக்கள் தம் பட்டறிவால் பெற்ற சில உண்மைகள் அல்லது தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டு அல்லது திரிக்கப்பட்டு பலராலும் வழிவழியாகப் பேசப்பட்டு வருகின்றன. இன்று நாம் இதற்கு அறிவியல் ரீதியான விளக்கத்தை தேடுவது 
அவசியமாகும்.
யாழப்பாணக் குடாநாடு உட்பட, மன்னாரிலிருந்து பரந்தன் முல்லைத்தீவை இணைக்கும் கோட்டிற்கு வடக்காக உள்ள பிரதேசங்கள் யாவும் மயோசின் காலம் என்று புவிச்சரிதவியலாளர்களால் வழங்கப்படுகின்ற – சுண்ணக்கற்பாறைகள் உருவான காலத்தில்
 தோன்றியவையாகும். அக்காலத்தில் இப் பிரதேசங்கள் கடலிலிருந்து மேலுயர்த்தப்பட்டன. இதனாலேயே தான் யாழ்ப்பாணப் பகுதிகளில் கிணறு தோண்டும் போது சங்கு, சிப்பி,போன்ற கடல் வாழ் உயிரினங்களின் 
சுவடுகளைக் காணக்கூடியதாக உள்ளது. 
இக்கடல் உயிரினச்சுவடுகள் நீண்ட காலமாக இடம்பெற்ற அமுக்கத்தாலும் பௌதிக இரசாயன மாற்றங்களினாலும் சுண்ணப்பாறைகளாக உருமாற்றம் பெற்றன. சுண்ணப் பாறைகள் வன்னிப்பிரதேசத்தில் மிக ஆழத்திலும் யாழ்ப்பாணத்தின் வடகரைப்பகுதிகளில்
 குறிப்பாக பலாலி, தெல்லிப்பளை. காங்கேசன்துறைப் பகுதிகளில் மேற்பரப்பிலும் காணப்படுகின்றன. இப்பாறைப்படைக்கு மேல் மண் படிவுகள் சில அடி முதல் 30 அடி வரையான கன பரிமாணத்தில் படிந்துள்ளன. ஒரு அங்குல மண் படிவு உருவாவதற்கு குறைந்தது 100 வருடங்கள் செல்லும் என புவிசிசரிதவியலாளர்கள் கணிப்பிட்டுள்ளனர். ஒழுங்குமுறையற்று குடாநாட்டு மண் வளத்தை சுரண்டுவோர் இதனைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுண்ணக்கற்பாறை அடிப்படைப் பாறையாக அமைந்திருப்பதனாலேயே இங்கு நாம் தரைக்குக்கீழ் இருந்து கிணறுகள் மூலம் நீரைப்பெற முடிகின்றது. இங்கு ஆதிகாலம் முதல் குடியிருப்புகள் தோன்றுவதற்கும், வரண்ட பிரதேசமாக இருப்பினும் நெருக்கமாக மக்கள் வாழ்வதற்கும்இ நீர் இறைப்பை நம்பிய விவசாய நடவடிக்கைகள் மேலோங்கியிருப்பதற்கும் இங்கு தரைக்கீழ் நீரை இலகுவில் பெறக்கூடியதாய் இருந்தமையே காரணமாகும்.
புவிச்சரிதவியலாளராலும் புவி வெளியுருவவியலாளராலும் சுண்ணக்கற்பாறை பிரதேசங்களிற்குரிய பல நிலவுருவங்கள் அடையாளம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றே தரைக்கீழ் நீரோடும் குகைகளின் தோற்றமாகும். மழையால் பெறப்படும் நீர் நிலத்தினுள் ஊடுருவிச்சென்றுஇ கடினமான அடித்தள சுண்ணக்கற்பாறைப் படைகளில் தேக்கம் பெற்று தரைக்கீழ் நீராகக் காணப்படுகின்றது. கிணறு தோண்டும் போது இத் தரைக்கீழ் நீரே ஊற்றாக கிணற்றுக்குள் வந்து
 தேங்குகின்றது.
இவ்வாறான ஊற்றுக் கண்கள் போன்று, உள்ளே அமைந்துள்ள சிறு துளைகள், தொடர் துளைகள், வெடிப்புகள் என்பன நீண்ட காலமாக இடம்பெறும் இரசாயன அழிதலுக்கு உட்பட்டு பெரிய குகைகளாக உருமாறிவிடுகின்றன. இக் குகைகள் சில அடி முதல் பல மைல் நீளம் 
வரை ஒரே தொடராக தரைக்குக் கீழே அமைந்திருக்கின்றன. குகை மேலும் மேலும் அரிக்கப்பட அதன் பரிமாணம் அதிகமாவதால்; குகையின் மேற்பரப்பு இடிந்து வீழ்கின்றது. இவ்வாறு உருவான ஒரு குகைப்பள்ளமே நிலாவரைக்கிணறு ஆகும்.
மேற்பரப்பு இடிந்து வீழ்ந்ததினால் உருவாகிய குகைப்பள்ளங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல பகுதிகளில் காணப்படுகின்றன. குரும்பசிட்டி பேய்க் கிணறு,புன்னாலைக்கட்டுவன் குளக்கிணறு, அல்வாய் மாயக்கை குளம், கரவெட்டி குளக்கிணறுஇ ஊரணி வற்றாக்கிணறு. 
கீரிமலைக்கேணி, யமுனா ஏரி போன்றவையும் நிலாவரைக்கிணறு போல் உருவானவையாகும். கீரிமலைக் கேணியின் தென்கீழ் மூலையில் ஆள் ஒருவர் உள்ளே நுழைந்து செல்லக்கூடிய அளவுக்கு குகை ஒன்று காணப்படுவதை இன்றும் காணமுடியும். அதனூடாகவே கேணிக்கு நல்ல தண்ணீர் வருகின்றது.
இவ்வாறான கிணறுகளை நாம் நீர்ப்பாசனத்திற்காகவும். மழை நீரை தரைக்குக் கீழே சேமிப்பதற்கான மீள்நிரப்பியாகவும் பயன்படுத்தலாம். நிலாவரைக்கிணறு உள்ளிட்ட இவ்வாறான கிணறுகளிற் சில நீண்டகாலமாகப் பாசனத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 எழுபதுகளில் நீர்வள வடிகாலமைப்புச் சபையினர் இவ்வகைக் கிணறுகள் பற்றி சில ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். நிலாவரைக்கிணற்றில் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி 10 மணித்தியாலங்களில்
 30.000 – 40,000 கலன் நீர் தோட்டப் பாசனத்திற்காக அக் கிணற்றில் இருந்து எடுக்கக்கூடிய தன்மை வெளியிடப்பட்டது. மேலதிகமாக நீரை இறைப்போமாயின் உப்பு நீர் மேலோங்கிவரும் 
ஆபத்து உள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைக்கீழ் நீர்வளம் பற்றிய சில ஆய்வுகள், இங்குள்ள தரைக்கீழ் நீர்ப்பீடம் கடினமான உப்பு நீரின் மேல் நன்னீர் வில்லை வடிவில் மிதப்பதை உறுதிசெய்துள்ளன. எனவே நல்ல நீர் கிடைக்கும் கிணறுகளில் இருந்து அதிகளவு நீரை வெளியேற்றுவோமாயின் அவை உப்பு நீர்க்கிணறுகளாக மாறிவிடும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தரைக்குக் கீழாக அமைந்துள்ள சுண்ணக்கற் குகைகள் மூலம் தரைக்கீழ் நீரின் பெரும்பகுதி வீணாகக் கடலைச் சென்றடையும் நிலை பல இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே இவ்வாறான குகைகள் கண்டறியப்பட்டு அவற்றின் உள்ளே அணைகளைக் கட்டி அல்லது நன்னீர் தேக்கங்களை 
ஏற்படுத்தி நிலத்தடி நீர் கடலினுள் செல்வதை தடைசெய்தல் வேண்டும். பிரதேச அபிவிருத்திக்கு திட்டமிடுவோர் இது
 பற்றி அக்கறை கொள்ளுதல் வேண்டும். யாழ்ப்பாணக்குடாநாட்டின் வளமும் வாழ்வும் இத் தரைக்கீழ் நீர் வளத்தின் கொள்ளளவை அதிகரிப்பதிலேயே பெரிதும் தங்கியுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
செவ்வாய், 14 நவம்பர், 2017

மூவர் மீது நேற்று யாழில் நடந்த ரவுடிகளின் வாள்வெட்டு

, யாழில் மூவர் மீது நேற்று வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுக்கு இலக்காகிய மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் தற்பொழுது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இருவர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்படுள்ளதுடன்,
ஈச்சமோட்டை வீதிப் பகுதியிலும் ஒருவர் மீது நேற்று வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதான வீதியில் உள்ள சலவைத் தொழிலகத்தின் உரிமையாளர் மற்றும் சலவைத் தொழில் நிலையத்தின்
நபர் மீதும் வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்ட அதேவேளை, ஈச்சமோட்டை பகுதியில் முச்சக்கரவண்டியில் வந்த இருவர் இளைஞர் ஒருவரை துரத்தித் துரத்தி வெட்டியுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 6 நவம்பர், 2017

நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் அலயத்தில் திருட்டு?

 எங்கள்  நவற்கிரி ஸ்ரீ  மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் கடந்த சில வருடங்களாக திருட்டுக்கள் இடம்பெற்று வரும் நிலையில்.05.11.2017.
 இன்று இரவும் ஆலய வாசற்கதவின் 
உட்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது " (குறிப்பு- பலநாள் 
கள்ளன் ஒருநாள் பிடிபடுவான் பிடிபடும்பொழுது நரசிங்க வைரவருக்கு நரபலிதான்)
தகவல் த. கண்ணன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>வெள்ளி, 6 அக்டோபர், 2017

ஈவினை அரசினர் தமிழ்கலவன் பாடசாலை மானவர்கள் புரமைப்பரிசில் பரீட்சையில் சித்தி

யாழ் ஈவினை அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் இம்முறை 28 மாணவர்கள்.2017.ஆண்டின் . ஐந்தாம்தர புரமைப்பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ள நிலையில் 19 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றுக்கொண்டதுடன் 13 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றுக்கொண்டனர். அவ்வகையில் 3 மாணவர்கள் வெட்டுப்புள்ளியான 155 மேற்பட்ட புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர்.
சித்திடைந்த மாணவர்கள் :- 
நிர்மலன் றோகன் சன்சிகா - 177 புள்ளிகள்
நித்தியானந்தம் கிசாளினி - 161 புள்ளிகள்
சந்திரலிங்கம் பவிஸ்னன் - 160 புள்ளிகள்
பெற்றுள்ளனர் இவர்களை  
எம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்
.நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன 


பிறந்தநாள் வாழ்த்து திரு.தங்கவேலு கண்ணன் (05.10.17).

யாழ்   நவற்கிரியை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தங்கவேலு  கண்ணன்  அவர்களின்  பிறந்த நாளை 05.10..2017. இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் 
 வெகு சிறப்பாக
 கொண்டாடுகின்றார்   .இவரை  அன்பு அப்பா அம்மா சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் சித்தப்பாமார்  சித்தி மார்  மச்சாள்மார் உற்றார் உறவினர்கள்
 நண்பர்களும் வாழ்த்துகின்றனர் .இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார்  செல்வச்சந்நிதி முருகன் 
இறை ஆசியுடன் 
  நோய் நொடி இன்றி துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் 
என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து   எம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்.நவக்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது.. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>சனி, 23 செப்டம்பர், 2017

கிட்டியும் புள்ளும் விளையாட்டும் அதன் பாடலும் இணைப்பு

கிட்டிப்புள் விளையாட்டு பற்றி  பின்வருமாறு குறிப்பு உள்ளது. கிட்டியும் புள்ளும் விளையாட்டே இன்றைய கிறிக்கற் விளையாட்டின் மூலவேர் என ஆய்வுகள் கூறுகின்றன.
”கிட்டிப்புள்” சிறுவர்கள் ஆடும் ஒரு விளையாட்டு.
கிட்டிப்புள், கிட்டிக்கோல் ஆகியவை இந்த விளையாட்டுக்குப் பயன்படும் கருவிகள். கிட்டிப்புள் சுமார் மூன்றுவிரல் பருமனில் 20 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. கீந்துகுழி ஆட்டத்துக்கு அதன் இரு முனைகளும் கூராக இருக்கும். அடிகோல் ஆட்டத்துக்கு முனைக்கூர் இருக்காது. கிட்டிக்கோல் ஒருவிரல் அல்லது இருவிரல் பருமனும் சுமார் 50 செனடிமீட்டர் நீளமும் கொண்டது.
ஆட்ட வகை
கிட்டிப்புள் விளையாட்டில் இரண்டு முறைகள் தமிழத்தில் இருந்து வந்தன.
கீந்து-குழி ஆட்டம் (இந்தியாவிலும், இலங்கையிலும்)
அடிகோல் ஆட்டம்
ஆடிவோர் வகை
குழு ஆட்டம்
அணி ஆட்டம்
குழு ஆட்டத்தில் ஒருவர் அடிக்க ஏனையோர் எதிராளி ஆவர். அணி ஆட்டத்தில் ஆடும்-அணி, எதிர்-அணி என இரு குழுக்கள் அமையும்.
கீந்துகுழி ஆட்டம்
ஆட்ட அரங்காகக் குதிக்காலால் திருகிய குழி, அல்லது சுமார் ஒருமுழம் நீளத்தில் செய்யப்பட்ட குழி அமைக்கப்படும். குழியில் ஒருமுனை இருக்கும்படி கிடைமட்டமாகக் கிட்டிப்புள் வைக்கப்படும். இந்தப் புள்ளைக் கிட்டிக்கோலால் தட்டிவிடுவர்.
 இதற்குத் தெண்டுதல் என்று பெயர்.
புள் பறக்கும்போது கிட்டிக்கோலால் அடிப்பர். புள் தொலைதூரம் செல்லும். எதிரில் உள்ளவர், அல்லது எதிர்-அணியினர் பறந்துவரும் புள்ளைப் பிடிக்கவேண்டும். இவ்வாறு தடியால்(கிட்டிக்கோலால்) குழியிலிருந்து தெண்டி(கிளப்பி) விளையாடுவதே கிட்டிப்புள் விளையாட்டாகும்.
புள் வீழ்ந்த இடத்திலிருந்து குழியை நோக்கிப் புள்ளு வீசப்படும். அப்போது நிலத்தோடு கிட்டியை விசுக்கி புள்ளு குழிக்குள் வீழாமல் பார்க்க வேண்டும்.
இந்த கிட்டிப் புள் தடியைத் தெண்டில், தாண்டில் என்றெல்லாம் சேலம் மாவட்டத்தில் குறிப்பிடுகின்றனர். இந்த ஆட்டம் வேறு வகையிலும் ஆடப்படும்.
வேறு வகையான விளக்கம்
அடிகோல் ஆட்டம்
அடிகோல் ஆட்டத்தில் கீந்துகுழி இல்லை. கிட்டிப்புள்ளின் முனை கூராக இருக்காது. ஒவ்வொருவரும் 4 முறையில் விளையாடவேண்டும்.
ஒன்றான் (வெற்றிப்புள்ளி 1)
ஒருகையால் புள்ளைத் தூக்கிப் போட்டு, மற்றொரு கையிலுள்ள கோலால் அடித்தல்
இரண்டான் (வெற்றிப்புள்ளி 2)
ஒரு கையிலுள்ள கோலின்மீது புள்ளை வைத்துத் தூக்கிப்போட்டு அதே கையிலுள்ள கோலால் அடித்தல்
மூன்றான் (வெற்றிப்புள்ளி 3)
ஒரு கையின் ஆள்காட்டி-விரல், சுண்டு-விரல் ஆகியவற்றில் புள்ளை நிறுத்தித் தூக்கிப் போட்டு மறுகையில் உள்ள கோலால் அடித்தல்
நாலான் (வெற்றிப்புள்ளி 4)
ஒரு காலின் மேல்-பாத்ததில் புள்ளை நிறுத்தி அக்காலால் தூக்கிப்போட்டுக் கையிலுள்ள கோலால் அடித்தல்
ஆடும் முறை
ஒன்றான், இரண்டான், மூன்றான், நாலான் முறைமையை ஒவ்வொருவரும் வரிசையாகப் பின்பற்ற வேண்டும். ஆட்டம் தவறாமல் ஆடினால் ஒருவர் தொடர்ந்தாற்போல் 4 படிநிலைகளையும் முடித்து 10 வெற்றிப் புள்ளிகளையும் ஈட்டலாம். ஒன்றில் ஒருவர் தவறினால் ஆட்டம் அடுத்தவர் கைக்கு மாறும். எல்லாரும் அடித்து முடிந்தபின் மறுமுறை ஆட்டம் வரும்போது ஒவ்வொருவரும் தான் தவறிய படிநிலையில் ஆடவேண்டும். ஒரு படிநிலை முடிந்தால்தான் அடுத்த படிநிலை.
பந்தைப் பிடித்தல்
ஒருவர் புள்ளை அடிக்கும்போது பிறர் பறந்துவரும் புள்ளைக் கையாலோ, துணியை விரித்தோ பிடிக்கலாம். புள் தரையில் விழாமல் பிடிக்கப்பட்டுவிட்டால் அடித்து-ஆடியவர் ஆட்டம் 
இழப்பார்.விழுந்த புள்ளை எறிதல்
பிடிபடாமல் புள் விழுந்துவிட்டால் அதனை எடுத்து அடித்த உத்திக் குழி அடையாளத்தை நோக்கி எறிவர். எறியும் பந்தை அடித்தவர் தடுத்து அடிக்கலாம். அடித்தாலும் அடிக்காவிட்டாலும் புள் விழுந்த இடத்திலிருந்து உத்திக் குழி வரையில் தான் அடித்த கோலால் அளந்து வரும் எண்ணிக்கையைத் தன் வெற்றிப்புள்ளி ஆக்கிக் கொள்ளலாம். புள் விழுந்த இடத்துக்கும், உத்திக்கும் இடையேயுள்ள இடைவெளி அவரது கோலின் அளவுக்குக் குறைந்தால், அடித்தவர் ஆட்டம் 
இழப்பர்.தண்டனை
ஆட்டத்தின் முடிவில் குறைந்த புள்ளிகள் பெற்றவருக்குத் தண்டனை உண்டு. அதிக புள்ளி பெற்றவர் தன் விருப்பம்போல் புள்ளைப் பிடித்துத் தொலைவுக்கு அடிப்பர். அங்கிருந்து பிறர் ஒவ்வொருவராக அவரவர் அடிக்குப் புள் சென்ற தொலைவிலிருந்து மூச்சுவிடாமல் பாடிக்கொண்டே கிட்டி அடித்த உத்தி-இடத்தைத் தொடவேண்டும்.”
கிட்டியும் புள்ளும் பாடல்
மாம்பட்டை மருதம்பட்டை
வௌவாலோடிய தென்னம்பட்டை
பூம்பட்டை புளியம்பட்டை
பட்டணம் பட்டணம் பட்டணம்….
பாக்குப் பழுத்தால் பதினாறோலை
மூங்கிலோலை முதிரப்பட்ட
வேட்ட வாளி பட்டணம் பட்டணம்….
ஆலையிலே சோலையிலே
ஆலம்பாடிய சந்தையிலே
கிட்டிப்புள்ளும் பம்பரமும்
கிறுகியடிக்கப் பாலாறு
பாலாறு பாலாறு பாலாறு
ஆத்துக்கட்டு அலம்பக்கட்டு
அவிட்டுக்கட்டு இறுக்கிக்கட்டு
இறுக்கி இறுக்கிக் கட்டு
ஈச்சாலை தும்போலை
பாக்குப் படிச்ச வண்ணான் ஓலை
மூங்கிலோலை முதிரைக்குத்தி
வேட்ட வாளி பட்டணம் பட்டணம்….
கீழாறோலை மேலாறோலை
எண்ணிப் பார்த்தால் பதினாறோலை
கிட்டிப் புள்ளும் பம்பரம்
கிறுகியடிக்கப் பாலாறு பாலாறு….
ஆலஞ்சருகு மடமடன்ன
ஆங்கோர் வண்டி உருண்டுவர
சோலைக் கிளியார் கொத்தியடிக்க
நாய் குலைக்க நல்லாண்டம்மா
பையோடா பையோடா….
நத்தை சூரி புல்லுத்தின்ன
நறுவிலி சங்கிலி பாராயோ
காரா வென்கிற பசுவைக் கண்டால்
கடைக்கண்ணாலே பாராயோ
பாராயோ பாராயோ….
கண்ணாம் பொத்தி கடகட மார்
ஆலஞ்ச நகு மடமட வெனவே
அங்கொரு வண்டிலுருண்டு வரக்
காலடி வரப் பொழுதேறிவரத்
தொந்தட்ட தெரு தட்ட
தெருவெங்கும் பொறி தட்ட தட்ட
பூம்பட்டை புளியம்பட்டை
வௌவாலோடிய தென்னம்பட்டை
பட்டணம் பட்டணம் பட்டணம்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 11 செப்டம்பர், 2017

மரணஅறிவித்தல் அமரர் சுப்பிரமணியம். இராமச்சந்திரன்.11.09.17.

யாழ்.  நவற்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட   (குட்டி கடை உரிமையாளர்) அமரர் சுப்பிரமணியம்   இராமச்சந்திரன்  (குட்டி)   அவர்கள் 11-09-2017. திங்கட்க்கிழமை  அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம். தங்கரத்தினம் (செல்லம்மா)    தம்பதிகளின் அன்பு மகனும் ,  
    அமிர்தகௌரி அவர்களின் அன்பு கணவரும் 
    தினேஸ்ராஜ்  திலக்சன்  சதுசா  ஆகியோரின் அன்புத்தந்தையும்  
  காலஞ்சென்ற  கருணாநிதி .  சரஸ்வதி  (செல்வராணி) புஸ்பராயா  சௌந்ராஜா  ரவிச்சந்திரன்   
 ஆகியோரின்  அன்புச்சகோதரனும் ஆவார்.
நிகழ்வுகள்
  அன்னாரின் இறுதிக்கிரியை திகதி-  12/09/2017, 10:00 மு.ப — 1:30 பி.ப.மணி  வரை   செவ்வக்கிழமை. அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று
   
 அன்னாரின்  நல்லடக்கம்
திகதி:  12/09/2017  செவ்வக்கிழமை- பி.ப 2:00. மணிக்கு ;.முகவரி   நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர்.. 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வியாழன், 7 செப்டம்பர், 2017

கோர விபத்தில் இளம் குடும்ப பெண் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.


 நிந்தவூரில் பைக் மீது பாரவூர்தியொன்றும் மோதுண்டதில் பெண்ணொருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.
குறித்த விபத்தில் அட்டப்பழம் பகுதியை சேர்ந்த இளம் குடும்ப பெண் ஒருவரே பலியாகியுள்ளதோடு, கணவன் மற்றும் பிள்ளை உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
.(நிழல் படங்கள் இணைப்பு) 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
திங்கள், 4 செப்டம்பர், 2017

யாழ் நெடுந்தீவில் 40 அடி மனிதனின் காலடியொன்றுகண்டுபிடிப்பு!

இலங்கையின் வடபகுதித் தீவுகள் அனைத்தும் இந்துமகாசமுத்திரம் வங்காளக் குடாக்கடல் அரபிக் கடல் எனும் முப்பெரும் பாரிய நீர்ப்பரப்புகளின் இடையே நிலைகொண்டவை வட தென் பருவக்காற்றுக்கள் ஓயாது நீண்ட தூரம் தள்ளிவரும் வேகமான அலைகளுக்கு முகம் கொடுத்தும் தொடர்ந்து வாழும் கரைக் கட்டுமானமுடையவை.
இவை தமது இருப்பை இதுவரை பேணுவது என்பது கற்களின் வலிமையால் மட்டுமே! அதிலும் கற்களின் வலிமையின் விசேடத் தன்மை அகமும் புறமும் நெடுந்தீவுக்கு சற்று அதிகமாகவே உள்ளது.
நெடுந்தீவின் அடித்தளப் பாறையும் மற்றத் தீவுகளை விட அகலமானதும் விரிந்து கிடப்பதுமாகும். நாற்புறமும் இறவட்டம் எனப்படும் கரைப்பகுதியே 500 மீற்றருக்குக் குறையாத தூரத்தைக் கொண்டது. கடல்நீர் வற்றும் போது இதைப் பார்க்கலாம். இறவட்டத்தில் பாரிய இயற்கை கற்கள் நாற்புறக் கடலிலும் நட்டுக் கொண்டும், பரவலாகவும் நிறைந்து அலைகளை எதிர்கொள்கின்றன.
தரைப் பரப்பிலும் மண்பரப்பைவிடவும் கற்பரப்பு மிகமிக அதிகமானது. அங்கு வாழ் மக்களின் உடலுரம் எதற்கும் முகம் கொடுக்கும் நெஞ்சுரம் எனும் பண்புகளின் அடித்தளமே இப் பாறைகளோ என்ற கேள்வி எழுமளவுக்கு இந்தக் கற்பரப்போடு மூதாதையர் போராடியிருக்கிறார்கள்.
நிலமட்டக் கற்பரப்பின் கற்களைக் கிளப்பியெடுத்து விவசாயத்துக்கு நிலமமைத்தார்கள். கிளப்பியெடுத்த அதே கற்களைக்கொண்டு பயிர்ப்பாதுகாப்புக்கு வேலிகள் அமைத்தார்கள்.
சரைப் பகிர் எனப்படும் சிறுகற்களின் அத்திவாரம் 20-30 சென்ரிமீட்டர் உயரமாக அழகாக அடுக்கப்பட்டு அதன்மேல் பெருங்கற்களின் உறுதியான அடுக்குகள் அடுக்கப்பட்டு அழகிய மதில் போல் காட்சிதரும் கற்களின் கட்டுமானம் கற்பகிர்கள் என்றழைக்கப்படுகின்றன.
பகிர்(வேலி) கட்டும் பயன் பாட்டுக்குரிய கற்கள் முருகைக் கற்கள். இவை நடுத்தரப் பாரமானவை. கல்வேலி இரட்டைப் பயனுடன்பலநூறு ஆண்டுகளுக்கு அழியாதிருக்கும் எல்லைபேணும் சொத்து. இதைப் பார்க்கவும் நெடுந்தீவுக்குப் உல்லாசப் பயணிகள் 
வருவதுண்டு.
மென் முருகை எனச் சற்றுப் பாரம் குறைந்த சுண்ணக்கற்கள்(காபனேற்கற்கள்) இவற்றின் பயன்பாடு ஒரு காலத்தில் நெடுந்தீவின் ஏற்றுமதிப் பொருளாதாரமாகவும் இருந்தது.
சுண்ணக்கற்களைச் சிறு சிராய்களாக உடைத்து பூவரசு மஞ்சவண்ணா வேம்பு கட்டை விறகுகளை அடுக்கி அந்த அடுக்குகளின் மேல் கற் சிராய்கள் அடுக்கி மாறி மாறிப் பல அடுக்குகள் குவியமிட்ட ஒரு பிரமிட் போன்ற வடிவத்தில் 40-50 அடி உயரத்தில் குவித்து எரியூட்டுவார்கள்.
சுண்ணாம்புச் சூளை எனப்படும் இது எரிந்து ஆறிச் சுண்ணாம்பாக எடுக்கும் காலம் ஒரு வாரத்தையும் தாண்டும். சீமேந்து தொழிற்சாலை வருவதற்கு முன் வட பிரதேசம் பூராவும் கட்டுமானப் பணிகளுக்கு இந்த சுண்ணாம்பே உதவியது ஏற்றுமதியானது.
இதைவிட ஒரு வகைப் பாறைகளாகக் கோளான்கள் அகழப்பட்டன. கிறனைற் எனப்படும் கருங்கற் தீப்பாறைகள்(மலைப்பாறைகள்) வகையைச் சார்ந்தவைகள் என்றாலும் இவற்றின் நிறம் வெண்மையை அண்டிப் போகும் மரநிறத்தைக் கொண்டவை.
இவை தூக்கிக் கையாளமுடியா அளவுக்குப் பாரமானதும் கடினமானதுமான கற்கள் என்பதால் அகழும் இடங்களில் வைத்து சிறுக உடைத்து ஏற்றிச் சென்று சல்லிகளாக உடைத்து சீமென்ற் கற்கள் அரிவதற்குப் விற்பார்கள். கல்லுடைப்பதை வாழ்நாள் தொழிலாகக் கொண்டு வாழ்ந்த பல குடும்பங்கள் அன்று ஊரில் இருந்தன. இன்று ஒருவர் கூட அந்தத் 
தொழிலோடு இல்லை.
இதே கோளான் கற்கள் தனித் தனிப் பாறைகளாக இல்லாமற் பெரிய பரப்புகளில் படர்ந்த பாறைகளாகவுமுள்ளன. இந்தப் பாறைப் படர்வுகள் சீமெந்தால் மெழுகியதுபோல அழுத்தமான மேற்பரப்பை 
அண்டிய தோற்முடையவை.
இந்தப் பாறைப் படர்வுகளில் ஒரு புல் நுனியைக் கூடக் காணமுடியாது. கடப்பாறையோ அலவாங்கோ போட்டால் நெருப்புப் பொறி பறக்கும் அளவுக்கு கெட்டியானவை இலகுவில் உடைவுக்குட்படாதவை.
நெடுந்தீவில் இப் படர்வு பெரிதாகவுள்ள இடங்கள் சாறாப்பிட்டியும், தொட்டாரமும். யாழ் குடாநாட்டிலும் திருநெல்வேலி புத்தூர் காங்கேசன்துறை வசாவிளான், கைதடி இன்னும் சில சில
 இடங்களில் இது போன்ற பாறைப்படர்வுகள் காணப்படுகின்றன. இப்படியான தோற்றமுள்ள நிலப் பகுதியைப் பொதுவாகக் கலட்டி என்றபெயரில் அழைப்பார்கள். நெடுந்தீவில் பகுதிப் பெயரல்லாமல் பரவைக் கற்கள் என்றே 
அழைக்கப்படுகின்றன.
தொட்டாரத்தில் இடைவிட்டு இடைவிட்டு அதிக பரப்பிலிருந்தாலும். சாறாப்பிட்டியில் இந்தப் படர்வின் பரப்பு 10 அல்லது 12 ஏக்கர் அளவைத் தாண்டும் தொடர்பரப்பாகவுள்ளது. படர் பாறைகளின் சராசரி ஆழமும் 10-12 அடிகளுக்குக் குறையாதிருக்கும்.
இப்போ உங்கள் கற்பனையைப் பறக்கவிடுங்கள் பத்து ஏக்கர் பரப்புள்ள, பத்தடி ஆழமான, இரும்பு போலக் கெட்டியான ஒரு பாறையில் 40 முழ மனிதன் மிதித்தாலோ 400 கோடி தொன் எடையை வைத்தாலோ சேற்றில் பதிவது போல ஒரு பதிவையோ தடயத்தையோ ஏற்படுத்த முடியவே முடியாது. அப்படியிருக்க இந்த ஐதீக மனிதப் பாதம் எப்படி?
அங்கு அகன்ற மனிதப் பாத வடிவமொன்று காணப்படுகிறது உண்மை தான்! பாதமோ மேல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ மூன்று அங்குல ஆழமாகப் பதிந்திருக்கிறது. இது மனிதன் மிதிப்பதால் சாத்தியமாகுமா?
நம்பகத் தன்மையை முழுமையும் மறுதலிக்கின்றதான கீழுள்ள நான்கு அனுமானங்களையும் பார்ப்போம்.?
1. நாற்பது முழத்தில் எப்போ மனிதனிருந்தான்? நான்கு முழ மனிதனையே காற் பாதத்தின் அளவை வைத்து உயரத்தைத் துல்லியமாச் சொல்லிவிட முடியாது. ஒரே உயரமான எல்லோருக்கும் ஒரே அளவான சப்பாத்துக்கள் பொருந்துவதில்லை.
அது போகட்டும் காலுள்ள இடம் நெடுந்தீவின் தென் மேற்குத் தொங்கல் வடகிழக்குத் தொங்கலுக்கு குறைந்தது 7 கிலோமீட்டர் தூரமிருக்கும்! 40 முழ உயர மனிதனாக இருந்தாலும் 20 அடிக்கு மேல் கவடு எட்டி வைக்க முடியுமா? கவுண்டன்-செந்தில் வாழைப்பழப் பகிடிமாதிரி ஒரு காலிங்க இருக்கு மற்றக்காலெங்க? சரி மண்ணில தான் வைபட்டாலும் இந்தக் கல்லில இந்த அழுத்தமெண்டால் மண்ணில ஒரு நிலாவரைக்கிணறு
 காணணுமே.
2. கற்பனைக் கதையின் கற்பனைப் பாத்திரங்களை நிஜமாக நம்பிக் கடவுளாக்கி, மலையைத் தூக்கியது கடலுக்கடியில் பாலமிருக்கிறது என்று கடைஞ்செடுத்த ராமாயண-பாரத முட்டாள் தனத்தில் அலையும் மக்கள் தானே இதையும் சில வேளை நம்புவார்கள்.
3. மனித பாதச் சுவட்டினைப் போன்ற கற்பாறைகள் அத் தீவெங்கும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. என்றுமொரு செய்தியும் பிரசுரமாகியிருந்தது.
இது முழுமையும் தவறான செய்தி நிலத்தில் கண்டெடுக்கும் கற்களை அண்ணளவாக ஒரு தோற்றத்தில் உருவகப்படுத்திப் பார்க்கலாமே தவிர. மனித வேலைப்பாடுகளாலானவையா துல்லியமாகவோ புதைபாட்டுச் சிதைவுகளோடோ காணமுடிந்த உருவப் பாறைகளா என்ற விபரங்கள் எதுவும் செய்தியில் கிடையாது.
4. பௌதீகக் காரணங்களான வெப்பமும், நீரும் சிதைக்கலாம். கரிய நிறப் பாறைகளில் வெப்பம் உறிஞ்சப்படும் போது மேற்பரப்பு மட்டும் அதிக வெப்படையும் காரணத்தால் கற்கள் சிதைவதும், நீரால் கரைக்க முடியாத பொருளில்லை என்பதால் நீரரிமானத்தாலும் சிதைவுகள் ஏற்பட்டிருக்கலாம் அந்த வகை வாய்புகளும் மிகக் குறைவு.
இப்பாறைகளின் அழுத்தமான பரப்பும் வெள்ளை சார் நிறமும் ஒளித் தெறிப்புக்கு வாய்ப்பே தவிர அதிகம் உறிஞ்சாது.
இத் தீவில் மழை நீரின் பொழி குறைவு அப்படி பொழிந்து மாரி வெள்ளம் வந்தாலும் ஒரிரு நாளுக்கு மேல் சாறாப்பிட்டி வெளியில் தங்குவதில்லை. ஓடி வடிந்துவிடும். இந்த இரு காரணிகளும் கூடச் சிதைவை ஏற்படுத்த வாய்ப்பற்ற போது விரல்களே துல்லியமாத் தெரியும் ஆழமான பாங்கான பாதத்தின் பதிவு எப்படி?
இந்த கிறனைற் பாறைகளின் 10 – 12 அடி ஆழத்தின் கீழ் கோறல்லைம்ஸ்ரோன் என்ற கொத்தைக் கல்சியப் பாறைகளின் படிவுகள் காணப்படுகின்றன.
காற்றுப் புகும் இடைவெளிகொண்ட இவையுள்ள இடமெல்லாமே அருமையான நன்னீர் ஊற்றுக்கள் வருகின்றன. இதையறிந்துகொண்டு சாறாப்பிட்டியில் முதலில் நான்கு நன்னீர்க் கிணறுகள் தோண்டப்பட்டிருந்தன.

இது தாச்சாயின் மலைக் குகைகளைப் பொழிந்து பாதையமைத்தது போல் கல்லுளிகள் கொண்டு பொழியப்பட்ட கிணறுகள். இக்காலம் நெடுந்தீவினை ஒல்லாந்தர் வைத்திருந்த காலங்களாக இருக்கலாம்
 என்ற கணிப்பு.
இந்தப் பொழிதலுக்காக வரவழைக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக அமைத்திருந்த கூடாரமருகே இவர்கள் பொழுதுபோக்காகப் பொழிந்தெடுத்த ஒரு காலடிச் சித்திரம் தான் கதைமாறி நாற்பது முழ மனிதனின் பாதமாக இன்று சொல்லப்படுகிறது
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>

புதன், 16 ஆகஸ்ட், 2017

மரண அறிவித்தல் திருமதிகதிரவேல் சந்திராதேவி-15.08.17.

யாழ்அச்சுவேலியை  பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட  திருமதிகதிரவேல் சந்திராதேவி -15.08.17.அன்று சிவபதம்
 அடைந்தார்இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல் 
குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>வியாழன், 10 ஆகஸ்ட், 2017

பாரவூர்தி வவுனியாவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது!

அம்பாறையிலிருந்து, கிளிநொச்சி நோக்கி செங்கற்களை ஏற்றிச் சென்ற ஹன்ரர் ரக பாரவூர்தியொன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று அதிகாலை வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாரவூர்தி வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது அதன் வில்லுத்தகடு உடைந்தமையாலேயே, விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், வாகன சாரதி மற்றும் பாரவூர்தியில் பயணித்த உதவியாளருக்கு எந்தவித காயமும் இன்றி தெய்வாதீனமாக உயிர்த்தப்பியுள்ளனர்.
இந்த நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு
 வருகின்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 31 ஜூலை, 2017

கவிஞர் தயாநிதிஎழுதிய கோயிலில் நடந்த ஆச்சாரம்?

இல்லாத ஒன்றுக்காய் ஊர் கூடிப் போராட்டம். ஆச்சாரம் ஆச்சாரமென ஆர்ப்பாட்டம். கோவிலில் சாதிக் கலவரம் தேர் வடம் இராணுவக் கரங்களில் இன்றைய நிலவரம். விடுதலைப் போர்
 காலங்களில் மௌனித்த பெரும் கூத்து மீண்டும் கட்டறுத்து சதிராடுதாம். ஊரிழந்தோம் உறவிழந்தோம் உடமைகளிழந்தோம் உயிரிழந்தோம் பயிரிழந்தோம் பண்பாடிழந்தோம் பள்ளியிழந்தோம்
 படிப்பிழந்தோம் தமிழன் என்ற துடிப்பிழந்தோம் கும்பிட்ட கோவிலும் இழந்தோம்.விரைவில் எல்லாமே இழப்போம் இதுவே தமிழன் நியதி. ஆக்கம் கவிஞர்தயாநிதிஇல்லாத ஒன்றுக்காய் ஊர் கூடிப் போராட்டம். ஆச்சாரம் ஆச்சாரமென ஆர்ப்பாட்டம். கோவிலில் 
சாதிக் கலவரம் தேர் வடம் இராணுவக் கரங்களில் இன்றைய நிலவரம். விடுதலைப் போர் காலங்களில் மௌனித்த பெரும் கூத்து மீண்டும் கட்டறுத்து சதிராடுதாம். ஊரிழந்தோம் உறவிழந்தோம் 
உடமைகளிழந்தோம் உயிரிழந்தோம் பயிரிழந்தோம் பண்பாடிழந்தோம் பள்ளியிழந்தோம் படிப்பிழந்தோம் தமிழன் என்ற துடிப்பிழந்தோம் கும்பிட்ட கோவிலும் இழந்தோம்.விரைவில் எல்லாமே இழப்போம் இதுவே தமிழன் நியதி. 
ஆக்கம் கவிஞர்தயாநிதி
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 29 ஜூலை, 2017

தாயகத்தில் தமிழ் நாடகங்களும் நாமும்…5

இங்கு படத்தில் இருப்பவர்.மிகவும் புகழ் பெற்ற ஒரு பகுத்தறிவாளர்..இந்தியாவின் கேரள திருவனந்தபுரம் திருவெல்லா என்ற ஊரில் 10 – 04 -1898 இல் பிறந்து சிறந்த கல்விமான் ..Colombo Thurstan college Botanic teacher…Dr.Abraham Kovoor…18.9.1978 ஸ்ரீ லங்காவில் காலமானார்…இவர் காலத்தில் புட்டபத்தி சாய் பாபா.கையில் 
விபூதியும்..வாயில் லிங்கமும் எடுத்த காலம்….இவர் கூட பல இடங்களில் அதை செய்து காட்டியவர்..யாழ் கொக்குவில் இந்துக்கல்லூரி மண்டபத்திலும் இதை செய்து காட்டியவர்…இவரது இந்த
 திறமை திரு.வேலணை வீரசிங்க்ததையும் கவர்ந்தது…அவரும் திராவிட கழக ஆதரவாளர்..எனக்கும் பழக்கமானார்…நான்..அமரர் .கணேசபிள்ளை அண்ணை..வீரசிங்கம் அன்னார சகிதம்.இவர் மனைவி இறந்ததை அறிந்து சென்றோம்…ஆச்சரியம்..அந்த மரண
 வீட்டில் யாரும் இல்லை ..ஒரு மகன் அவரும் வரவில்லை…இறந்த அவர் மனைவியின் உடல் எந்த அலங்காரமும் இன்றி வெள்ளை துணியால் மூடப்பட்டிருந்தது… அருகில் யாரும் 
இல்லை ..மேல்மாடியில் கோவூர்.. எமக்கு மனதை உறுத்தியது..என்ன சொல்ல..வருத்தம் சொல்லவா..வாய் திறக்கும்
 முன்னர் கை காட்டினார்…சொன்னார் 50 ஆண்டு காலம் என்னோடு வாழ்ந்தா..இன்னும் சிறிது நேரத்தில் போதனா வைத்தியசாலை நபர்கள் வந்து கொண்டு செல்வார்கள் என்று..இப்போ இவர் மீது சாதுவாக எனக்கு பயம் வந்து விட்டது என்றே சொல்லலாம்…
அது சரி ..இவருக்கும் எமது நாடகத்திற்கும் என்ன சம்பந்தம் என நினைக்கிறீர்களா…இவர் ஒரு மனோ தத்துவ டாக்டரும் கூட….இவர் வாழ்வில் ஒரு நோயாளிக்கு நடந்த உண்மை கதை..நம்பிக்கை… என்ற பெயரில் நாடகமாக உருவானது
..மிக அருமையான கதை..
இந்த நாடகத்தில்…ஜோர்ஜ் சந்திரசேகரன் ஆபிரகாம் கோவூராக.. எதிர் மறை மந்திரவாதியாக நான்…கபட தபால் காரனாக கே.எஸ்.பாலச்சந்திரன்…வெளிநாடு சென்ற கணவனை எதிர்பார்த்து ஏங்கும் மனைவியாக மணிமேகலை ராமநாதன்…பெற்றோராக.
. எஸ்.எஸ்.கணேசபிள்ளை ..சந்திரபிரபா மாதவன்….இதில் பேய் பிடித்த மணிமேகலைக்கு பேய் விரட்டும் காட்சி..நானும் மணிமேகலையும் உடுக்கு வாத்தியத்துக்கு கற்ப்பூர சட்டியியுடன் ஆடும் ஆட்டம் மக்கள் ஆர்வத்துடன்..குழந்தைகள் அழுகுரல்
 பயத்தில்… கொழும்பை தொடர்ந்து யாழ்ப்பாணம் படி தொட்டி எங்கும்… இ.போ.ச.பஸ் தொடங்கி..டாக்ஸி வரை எனதும்..மணியின் படமும் தான்… ஒருமுறை தீச்சட்டி தடம் புரண்டு
 என் மேல் கொட்டியது..இந்த நாடகம் வடமாகாணத்தில் பல இடங்களில் நடந்தாலும்…கொடிகாமம் மகா வித்தியாலயத்தில் நாடகம்..முன்னர் தலைமை ஆசிரியர் இந்த நாடகத்தை 
பார்த்துள்ளார்..என்னிடம் வந்து சொன்னார் எனக்கு ஒரு உதவி செய்யவேண்டும்..இந்த மாமரதிலை காய்க்கிற காய் ஒண்டையும் பெடியள் விடுறாங்கள் இல்லை ..நீங்கள் பேயாடி 
ஒரு மரத்தில் பேயை ஆணி அறைந்து கட்டுவீர்களே..அதை இந்த மரத்தில் செய்யுங்க என்றார்.. அதன் படி நானும் 
செய்தேன்…இரண்டாண்டுகளுக்கு பின்னர் எதேச்சையாக அவரை கண்டேன்.. சொன்னார் பொடியள் அந்த மரத்தடி பக்கமே போவதில்லை என.இப்படி… படித்ததற்கு நன்றி....   /தொடரும் புதன், 26 ஜூலை, 2017

அச்சுவேலியில் கோயிலில் நடந்த சண்டையின் பின்பு சிங்கள இராணுவத்தினர் தேர்இழுப்பு

யாழ்ப்பாணத்தில், அச்சுவேலியில் உள்ள ஒரு கோயிலில் நடந்த சாதிச் சண்டையின் விளைவாக, சிங்கள இராணுவத்தினர் தேரிழுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது! இது ஆண்டாண்டு காலமாக சாதி பிரச்சினை இருந்து வந்த ஒரு கோவில். 
இந்த வருடம் மீண்டும் அந்த பிரச்சினை ஆரம்பமாகி உள்ளது. அந்த பிரச்சனையால் யார் தேர் இழுப்பதென்று சண்டை வந்தது. அதனால், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவம் தலையிட்டு, தாமே அந்த தேரை இழுப்பதென்று
 முடிவு செய்தனர். 
(ஆரியர் என்பது திராவிடரிலும் கீழானது ஆரியரில் கீழானவர்கள் சிங்களர் சிங்களரிலும் சிங்கள இராணுவத்தில் பல தீண்டத்தகாத சாதி என்ற 
ஒன்றும் உண்டு
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>இலங்கையில் மறைந்துள்ள மர்மங்கள் இளஞ்செழியனின் கண்ணீர்!

தனது பாதுகாப்பிற்காக செயற்பட்ட பொலிஸ் அதிகாரி துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தமை குறித்து நீதிபதி இளஞ்செழியன் கண்ணீருடன் மன்னிப்பு கோரினார்.
இந்த சம்பவம் உள்நாடு மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.
இவ்வாறான நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கையின் பிரபல நீதிபதியும் எழுத்தாளரும் கவிஞரும் மனித உரிமை ஆர்வலருமான பசில் பெர்னாண்டோ விளக்கமளித்துள்ளார்.
அவர் எழுதியுள்ள கட்டுரையில் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 25 ஜூலை, 2017

யாழ் நீதிபதி மீதான கொலை முயற்சி தாக்குதல்! துப்பாக்கிதாரியின் இடம் கண்டு பிடிப்பு!!

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்காக விசேட விசாரணை பிரிவு ஒன்று 
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்காக பல பொலிஸ் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் சாவகச்சேரி பிரதேசத்தில் மறைந்திருப்பதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
சதீஷ் என்ற அடையாளப்படுத்தும் சந்தேகநபரே இவ்வாறு மறைந்திருப்பதாக கூறப்படுகின்றது. அவரை கைது செய்யும் நோக்கில் சாவகச்சேரியல் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சதீஷ் என்பவரின் மூத்த சகோதரர் மற்றும் மேலும் ஒரு உறவினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் 
குறிப்பிட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
திங்கள், 24 ஜூலை, 2017

யாழ். நீதிபதி மா.இளஞ்செழியன் இலக்கு வைக்கப்படவில்லை! – யாழ். பிராந்திய பொலிஸ் ?

யாழ். துப்பாக்கிப் பிரயோகம் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டவில்லை எனவும் யாழ்ப்பாணத்தில் நீதிபதிக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும் யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்துள்ளார்.
நல்லூரில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு
 தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ,“நல்லூர் சம்பவம் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியினை இலக்கு வைத்து நடத்தப்படவில்லை. நீதிபதியின் மெய்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகஸ்தர் மது போதையில் இருந்தவரை கண்டிப்பதற்காக எடுத்த நடவடிக்கை காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என தற்போது என்னால்
 சொல்ல முடியும்.
நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தால், நிச்சயமாக அவரது வாகனத்திற்கு சூடு பட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் நடைபெறவில்லை. நீதிபதியும் வாகனத்தை விட்டு கீழே இறங்கி தனது மெய்ப்பாதுகாவலரும், மதுபோதையில் நின்ற நபரும் முரண்பட்டுகொண்டதை 
பார்த்துள்ளார்.
இந்நிலையில், துப்பாக்கிதாரியின் இலக்கு நீதிபதியாக இருந்திருந்தால் நேராக சுட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு அவர் சுடவில்லை. எனவே இது நிச்சயமாக அந்த சந்தர்ப்ப சூழலில் நடந்த விடயமே என
 கூறுவேன்.
நீதிபதிக்கு யாழ்ப்பாணத்தில் எந்தவிதமான மரண அச்சுறுத்தலும் இல்லை என விசாரணைகள் மூலம் அறிந்து கொண்டுள்ளோம்” 
என தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>சனி, 22 ஜூலை, 2017

யாழ் நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகத்திற்க்கு துப்பாக்கிச் சூடு!

யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனம் வழிமறிக்கப்பட்டு இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வழிமறித்து துப்பாக்கிப் பிரயோகத்தை
 மேற்கொண்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதிப்பு எதுவும் நேரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்துள்ளதாகவும் 
தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த இருவரும் தற்பொழுது யாழ். போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், மற்றையவருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நீதிபதி இளைஞ்செழியனின் வாகனத்தை இடைமறித்த இனந்தெரியாத நபர்கள், அவரை நோக்கி 10 தடவை துப்பாக்கி சூடு நடத்திய வேளையில், அவரின் மெய்ப்பாதுகாவலர்களின் அதீத முயற்சியினால் 
நீதிபதி பாதுகாக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சந்தேக நபர் அங்கிருந்த பெண்ணொருவரின் மோட்டார் சைக்கிளை பறித்து தப்பிச் செல்ல முற்பட்ட போது, அவரது துப்பாக்கி கீழே வீழ்ந்துள்ள நிலையில், சந்தேகநபர் சாதுர்யமாக பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாகவும் சந்தேக நபர் வைத்திருந்த துப்பாக்கி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் பதற்றம் நிலவி வருவதுடன், விஷேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் 
தெரிவித்தார்.
இதேவேளை, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன் ஆகியோர் தலைமையில் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையிலேயே நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

Blogger இயக்குவது.