யாழ் நவற்கிரி புத்தூர் நிலாவரையில் ஆழம் காணாத ( வற்றா உற்றுநீர் நிலையம்) நிலாவரைக்கிணறு பற்றி எமது மக்களிடையே பாரம்பரிய கதைகள் பல வழக்கிலுள்ளன. ‘ ஆழங்காண முடியாத கிணறு இது….’ ‘நிலாவரைக் கிணற்றில் எலுமிச்சம் பழம்
ஒன்றை போட்டு அது கீரிமலைக் கேணியில் வந்து மிதந்தது இப்படியாகப் பல கதைகள் மக்கள் வாய்மொழி மூலம் பரப்பப்பட்டு வருகின்றன. அக் கால மக்கள் தம் பட்டறிவால் பெற்ற சில உண்மைகள் அல்லது தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டு அல்லது திரிக்கப்பட்டு பலராலும் வழிவழியாகப் பேசப்பட்டு வருகின்றன. இன்று நாம் இதற்கு அறிவியல் ரீதியான விளக்கத்தை தேடுவது
அவசியமாகும்.
யாழப்பாணக் குடாநாடு உட்பட, மன்னாரிலிருந்து பரந்தன் முல்லைத்தீவை இணைக்கும் கோட்டிற்கு வடக்காக உள்ள பிரதேசங்கள் யாவும் மயோசின் காலம் என்று புவிச்சரிதவியலாளர்களால் வழங்கப்படுகின்ற – சுண்ணக்கற்பாறைகள் உருவான காலத்தில்
தோன்றியவையாகும். அக்காலத்தில் இப் பிரதேசங்கள் கடலிலிருந்து மேலுயர்த்தப்பட்டன. இதனாலேயே தான் யாழ்ப்பாணப் பகுதிகளில் கிணறு தோண்டும் போது சங்கு, சிப்பி,போன்ற கடல் வாழ் உயிரினங்களின்
சுவடுகளைக் காணக்கூடியதாக உள்ளது.
இக்கடல் உயிரினச்சுவடுகள் நீண்ட காலமாக இடம்பெற்ற அமுக்கத்தாலும் பௌதிக இரசாயன மாற்றங்களினாலும் சுண்ணப்பாறைகளாக உருமாற்றம் பெற்றன. சுண்ணப் பாறைகள் வன்னிப்பிரதேசத்தில் மிக ஆழத்திலும் யாழ்ப்பாணத்தின் வடகரைப்பகுதிகளில்
குறிப்பாக பலாலி, தெல்லிப்பளை. காங்கேசன்துறைப் பகுதிகளில் மேற்பரப்பிலும் காணப்படுகின்றன. இப்பாறைப்படைக்கு மேல் மண் படிவுகள் சில அடி முதல் 30 அடி வரையான கன பரிமாணத்தில் படிந்துள்ளன. ஒரு அங்குல மண் படிவு உருவாவதற்கு குறைந்தது 100 வருடங்கள் செல்லும் என புவிசிசரிதவியலாளர்கள் கணிப்பிட்டுள்ளனர். ஒழுங்குமுறையற்று குடாநாட்டு மண் வளத்தை சுரண்டுவோர் இதனைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுண்ணக்கற்பாறை அடிப்படைப் பாறையாக அமைந்திருப்பதனாலேயே இங்கு நாம் தரைக்குக்கீழ் இருந்து கிணறுகள் மூலம் நீரைப்பெற முடிகின்றது. இங்கு ஆதிகாலம் முதல் குடியிருப்புகள் தோன்றுவதற்கும், வரண்ட பிரதேசமாக இருப்பினும் நெருக்கமாக மக்கள் வாழ்வதற்கும்இ நீர் இறைப்பை நம்பிய விவசாய நடவடிக்கைகள் மேலோங்கியிருப்பதற்கும் இங்கு தரைக்கீழ் நீரை இலகுவில் பெறக்கூடியதாய் இருந்தமையே காரணமாகும்.
புவிச்சரிதவியலாளராலும் புவி வெளியுருவவியலாளராலும் சுண்ணக்கற்பாறை பிரதேசங்களிற்குரிய பல நிலவுருவங்கள் அடையாளம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றே தரைக்கீழ் நீரோடும் குகைகளின் தோற்றமாகும். மழையால் பெறப்படும் நீர் நிலத்தினுள் ஊடுருவிச்சென்றுஇ கடினமான அடித்தள சுண்ணக்கற்பாறைப் படைகளில் தேக்கம் பெற்று தரைக்கீழ் நீராகக் காணப்படுகின்றது. கிணறு தோண்டும் போது இத் தரைக்கீழ் நீரே ஊற்றாக கிணற்றுக்குள் வந்து
தேங்குகின்றது.
இவ்வாறான ஊற்றுக் கண்கள் போன்று, உள்ளே அமைந்துள்ள சிறு துளைகள், தொடர் துளைகள், வெடிப்புகள் என்பன நீண்ட காலமாக இடம்பெறும் இரசாயன அழிதலுக்கு உட்பட்டு பெரிய குகைகளாக உருமாறிவிடுகின்றன. இக் குகைகள் சில அடி முதல் பல மைல் நீளம்
வரை ஒரே தொடராக தரைக்குக் கீழே அமைந்திருக்கின்றன. குகை மேலும் மேலும் அரிக்கப்பட அதன் பரிமாணம் அதிகமாவதால்; குகையின் மேற்பரப்பு இடிந்து வீழ்கின்றது. இவ்வாறு உருவான ஒரு குகைப்பள்ளமே நிலாவரைக்கிணறு ஆகும்.
மேற்பரப்பு இடிந்து வீழ்ந்ததினால் உருவாகிய குகைப்பள்ளங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல பகுதிகளில் காணப்படுகின்றன. குரும்பசிட்டி பேய்க் கிணறு,புன்னாலைக்கட்டுவன் குளக்கிணறு, அல்வாய் மாயக்கை குளம், கரவெட்டி குளக்கிணறுஇ ஊரணி வற்றாக்கிணறு.
கீரிமலைக்கேணி, யமுனா ஏரி போன்றவையும் நிலாவரைக்கிணறு போல் உருவானவையாகும். கீரிமலைக் கேணியின் தென்கீழ் மூலையில் ஆள் ஒருவர் உள்ளே நுழைந்து செல்லக்கூடிய அளவுக்கு குகை ஒன்று காணப்படுவதை இன்றும் காணமுடியும். அதனூடாகவே கேணிக்கு நல்ல தண்ணீர் வருகின்றது.
இவ்வாறான கிணறுகளை நாம் நீர்ப்பாசனத்திற்காகவும். மழை நீரை தரைக்குக் கீழே சேமிப்பதற்கான மீள்நிரப்பியாகவும் பயன்படுத்தலாம். நிலாவரைக்கிணறு உள்ளிட்ட இவ்வாறான கிணறுகளிற் சில நீண்டகாலமாகப் பாசனத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
எழுபதுகளில் நீர்வள வடிகாலமைப்புச் சபையினர் இவ்வகைக் கிணறுகள் பற்றி சில ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். நிலாவரைக்கிணற்றில் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி 10 மணித்தியாலங்களில்
30.000 – 40,000 கலன் நீர் தோட்டப் பாசனத்திற்காக அக் கிணற்றில் இருந்து எடுக்கக்கூடிய தன்மை வெளியிடப்பட்டது. மேலதிகமாக நீரை இறைப்போமாயின் உப்பு நீர் மேலோங்கிவரும்
ஆபத்து உள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைக்கீழ் நீர்வளம் பற்றிய சில ஆய்வுகள், இங்குள்ள தரைக்கீழ் நீர்ப்பீடம் கடினமான உப்பு நீரின் மேல் நன்னீர் வில்லை வடிவில் மிதப்பதை உறுதிசெய்துள்ளன. எனவே நல்ல நீர் கிடைக்கும் கிணறுகளில் இருந்து அதிகளவு நீரை வெளியேற்றுவோமாயின் அவை உப்பு நீர்க்கிணறுகளாக மாறிவிடும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தரைக்குக் கீழாக அமைந்துள்ள சுண்ணக்கற் குகைகள் மூலம் தரைக்கீழ் நீரின் பெரும்பகுதி வீணாகக் கடலைச் சென்றடையும் நிலை பல இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே இவ்வாறான குகைகள் கண்டறியப்பட்டு அவற்றின் உள்ளே அணைகளைக் கட்டி அல்லது நன்னீர் தேக்கங்களை
ஏற்படுத்தி நிலத்தடி நீர் கடலினுள் செல்வதை தடைசெய்தல் வேண்டும். பிரதேச அபிவிருத்திக்கு திட்டமிடுவோர் இது
பற்றி அக்கறை கொள்ளுதல் வேண்டும். யாழ்ப்பாணக்குடாநாட்டின் வளமும் வாழ்வும் இத் தரைக்கீழ் நீர் வளத்தின் கொள்ளளவை அதிகரிப்பதிலேயே பெரிதும் தங்கியுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக