புதன், 23 செப்டம்பர், 2026

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபை தேர்தல் 2027 நடாத்துவது குறித்து அரசாங்கம் கவனம்

தற்போதைய இந்திய அரசின் அழுத்தங்களையடுத்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளுக்கான தேர்தல்களை முதலில் நடாத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தென்னிலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

மாகாண சபைத் தேர்தல்களைக் கட்டம் கட்டமாக நடத்தும் பொறிமுறையின் கீழ், முதற்கட்டமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்களை நடத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருவதாக கூறப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கில் தற்போதுள்ள அரசியல் சூழல் அரசாங்கத்திற்குச் சாதகமாக இருப்பதுடன், தேர்தலை விரைவாக நடத்துமாறு இந்தியா வழங்கி வரும் அழுத்தங்களுக்கு மத்தியில் தேர்தல் சிந்தனையில் இலங்கை அரசு உள்ளது.

இலங்கையின் 9 மாகாண சபைகளினதும் பதவிக் காலம் முடிவடைந்து 6 ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ள நிலையில், அவை அனைத்தும் தற்போது ஆளுநர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கி வருகின்றன.

வடமாகாண சபைத் தேர்தலை நடாத்துவது தொடர்பாக வடக்கிலுள்ள தமிழ் தேசிய கட்சிகள் பலவும் இந்தியாவை வலுயுறுத்திவருகின்றன.13வது திருத்தச்சட்டத்தின் கீழான மாகாணசபை முறைமையை எதிர்த்துவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தனது வேட்பாளர் பட்டியலை தயார்படுத்தியுள்ளது.

இந்நிலையிலேயே முதற்கட்டமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்களையும், அதன்பின்னர் ஏனைய மாகாண சபைக்கான தேர்தல்களையும் நடத்துவது குறித்து அரசாங்கம் சிந்திப்பதாக கூறப்படுகின்றது.

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு இந்தியா கொடுத்து வரும் அழுத்தங்களுக்குப் பொருத்தமான இராஜதந்திர தீர்வாக அரசாங்கம் தனை கருதுகின்றது.

இந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களைப் பழைய தேர்தல் முறையின் கீழ் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இலங்கையின் அனைத்து மாகாண சபைகளும் தற்போது ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகின்றமை என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.