மட்டக்களப்பில் பற்று மற்றும் தூயதுளிர் அமைப்பினர் இணைந்து ‘அடுத்த தலைமுறைக்கு பசுமையை கையளிப்போம்’ எனும் செயற்திட்டத்திற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் பயன்பாடின்றி இருக்கும் நிலங்கள் முழுவதும் 5000 பனை விதைகள் மற்றும் 500 வேம்பு மர நடுகை திட்டம் இடம்பெற்று
வருகின்றது.
அந்தவகையில் தூயதுளிர் அமைப்பின் செயலாளரும், பற்று அமைப்பின் ஸ்தாபகருமான யோகநாதன் விஜயலக்ஸ்மணன் தலைமையில் அமைப்பின் நிருவாக உறுப்பினர்கள் சகிதம் கலந்து கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பயன்பாடின்றி இருக்கும் நிலங்களில் பனை விதைகள் மற்றும் வேம்பு மரங்களை நடுகை செய்தனர்.
குறித்த திட்டம் தொடர்பில் தூயதுளிர் அமைப்பின் செயலாளரும், பற்று அமைப்பின் ஸ்தாபகருமான யோகநாதன் விஜயலக்ஸ்மணன் கருத்து தெரிவிக்கையில்,
“மரங்கள் நடுகை என்பது வெறுமனே வாழும் சமுதாயத்துக்கு மட்டுமல்ல இனி வரப்போகும் சமுதாயத்துக்குமானது. தலைமுறைகள் கடந்து அதன் பயன்தரும் தாக்கம் இருக்கும். பனை மற்றும் வேம்பு பல்லாயிரம் வருடங்களாக தமிழர் பண்பாடோடும் கலாசாரத்தோடும் மருத்துவத்தோடும் பின்னிப்பிணைந்த மரவகைகளாகும்.
இதன் அடிப்படையில் பயன்பாடின்றி இருக்கும் நிலங்கள் முழுவதும் பனம் விதைகளையும் வேம்பு மரங்களை நாட்டி வளிமண்டத்தையும், மண் வளத்தையும் உயிர் பல்வகமையை பேணுவதோடு சுத்தமான காற்றையும் நிலத்தடி நீரின் இருப்பையும் உறுதி செய்ய எல்லோரும் சேர்ந்து இத்திட்டத்தை வெற்றி அடையச் செய்ய அர்பணிப்போடு செயலாற்ற வேண்டும்” எனவும் கேட்டுக் கொண்டார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக