வியாழன், 4 பிப்ரவரி, 2021

நாட்டில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த விரும்பும் இந்தியா

 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் மாகாண சபைகளை முழுமையாக அமுல்படுத்துவதன் மூலம் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு குறித்த இந்தியாவின் நீண்டகால மற்றும் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை மீண்டும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என சிறிலங்காவுக்கான  இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜாகோப் 
தெரிவித்துள்ளார். 
 சிறிலங்காவுக்கான  பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜாகோப் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவுப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.  
 இதன் போது பிரதி உயர் ஸ்தானிகர் இதனைத் தெரிவித்துள்ளார்.  
 இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளதாவது,  
 ஆரம்பத்திலேயே சிறிலங்காவக்கு  இந்தியா தடுப்பூசிகளை வழங்கியமையை வரவேற்பதாக இந்த சந்திப்பின் போது ரவூப் ஹக்கீம் கூறினார். பொருளாதாரம் , நிதி மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல் இதன் போது இடம்பெற்றது. 
 அண்மைக் காலமாக முஸ்லிம் சமூகத்தினர் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஹக்கீம் கலந்துரையாடலின் போது தெரிவித்தார். 
 அத்தோடு இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் பற்றியும் அவர் கருத்துக்களை
 தெரிவித்தார். 
 2019 நவம்பர் வரை சிறிலங்கா - இந்தியாவுக்குகிடையிலான தொடர்பாடல்கள் குறித்து இதன் போது பிரதி உயர் ஸ்தானிகர் நினைவு கூர்ந்தார். 2020 செப்டெம்பரில் சிறிலங்கா  பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் நடைபெற்ற
 மெய்நிகர் மாநாட்டின் போது , 'இலங்கையில் அனைத்து இன மக்களின் எதிர்பார்ப்புக்களையும் இலங்கை உணர்ந்து செயற்படும்.' என்று உறுதியளித்திருந்ததையும் இதன் போது பிரதி உயர் ஸ்தானிகர்
 குறிப்பிட்டார். 
 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் மாகாண சபைகளை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு குறித்த இந்தியாவின் நீண்டகால மற்றும் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை பிரதி உயர் ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தினார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.