திங்கள், 31 ஆகஸ்ட், 2020

செட்டிக்குளத்தில் வைத்தியர் பற்றாக்குறையை தீர்க்க கோரி போராட்டம்

 

வவுனியா – செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி அப்பகுதி மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
செட்டிகுளம் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (31) காலை 8.30 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம்
 முன்னெடுக்கப்பட்டது.
செட்டிகுளம் வைத்தியசாலையில் பல நிர்வாக குறைபாடுகள் காணப்படுவதாக தெரிவித்த மக்கள், குறிப்பாக வைத்தியர் பற்றாக்குறை காரணமாக நோயாளார் விடுதி மூடப்பட்டுள்ளதுடன், சிறிய நோய்களிற்காக 
சிகிச்சைக்கு சென்றாலும் வவுனியா பொது 
வைத்தியசாலைக்கு மாற்றப்படும் நிலையே காணப்படுவதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதனால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு உள்ளாகுவதாகவும் கூலி தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளதால், வவுனியா சென்று வருவதற்கு பொருளாதார ரீதியாக கஸ்டங்களை அனுபவித்து வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
குறித்த வைத்தியசாலையை நம்பி செட்டிக்குளம் பிரதேசம் மற்றும் அதனை அண்மித்த பல கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்ற நிலையில், செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் 12 வைத்தியர்களுக்கான நியமனம் (காடர்) இருக்கின்றபோதும் 2 வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றி வருகின்றனர் என 
தெரிவிக்கப்படுகிறது.
சத்திர சிகிச்சை நிபுணர், பல்வைத்தியர் போன்றோரும் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் மருத்துவ விடுதியையும் இயக்க முடியாமல் நோயாளர்களிற்கு சரியான சிகிச்சைகளை வழங்கமுடியாத அவல நிலையும் ஏற்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள்
 குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், செட்டிகுளம் வைத்தியசாலையில் காணப்படுகின்ற நிர்வாக குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு வலியறுத்தியே இன்று 
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வைத்தியசாலைக்குள் செல்ல முற்பட்டபோது பொலிஸாரால் வைத்தியசாலை பிரதான வாயில் மூடப்பட்டது. இதனால் நீண்ட நேரமாக வாயிலை மறித்தபடி பொதுமக்கள் 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மக்களுடன் கலந்துரையாடியதுடன், இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு தெரிவிப்பதுடன், எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் இந்த வைத்தியசாலையில் இருக்கின்ற அனேகமான பிரச்சினைகள் தீர்க்கப்படுமென 
உறுதியளித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் உறுதிமொழியை அடுத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் மற்றும் செட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினர்கள் பொதுமக்கள் நோயாளர்கள், இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.