இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவு தினம்.26-04-2021. இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ். தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நினைவுத் தூவிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஜானம், யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரெட்ணம் அடிகளார், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகத்தினர், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி
செலுத்தியிருந்தனர்.
‘தந்தை செல்வா’ என அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் இலங்கை தமிழர் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத தலைவராவார்.
மார்ச் மாதம் 31ஆம் திகதி ஆயிரத்து 898 ஆம் ஆண்டு மலேசியாவில் பிறந்த செல்வநாயகம், ‘ஈழத்து காந்தி’ என உலகத் தமிழர்களால்
போற்றப்படுகின்றார்.
யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, பரியோவான் கல்லூரிகளில், பழைய மாணவரான இவர் இலங்கை சட்டக் கல்லூரியிலும், லண்டன் பல்கலைக்கழகத்திலும் சட்டத்துறையில்
பட்டம் பெற்றார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் அங்கம் வகித்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம், இலங்கையின் முதல் இனத்துவ அடையாளக் கட்சியான தமிழ் அரசுக் கட்சியை
ஸ்தாபித்தார்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு கூட்டாட்சியை வலியுறுத்திய எஸ்.ஜே.வி.செல்வநாயகம், பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்திருந்தார்.
ஒப்பந்தங்களும் பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்து இனப்பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில் தனிநாட்டு தீர்வை அவர்
முன்வைத்தார்.
இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த எஸ்.ஜே.வி. செல்வநாயகம், இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ் மக்கள் மனங்களில் ‘தந்தை செல்வா’ என்னும் நாமத்துடன் இன்றும் நிலைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக