செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடத்தைக் கோரி நடைப்பயணத்தை ஆரம்பித்த இலங்கையர்


அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர் ஒருவர் தனிநபராக இன்று நடைப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். அகதிகளாக நிர்கதிக்குள்ளாகியுள்ள அனைத்து மக்களுக்கும் நிரந்தர வதிவிடத்தை வழங்குமாறு வலியுறுத்தி அவர் இந்த நடைப்பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இதற்கமைய, நீல் பாரா (Neil Para) என்ற இலங்கையரே சுமார் 1000 கிலோமீற்றர் நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் Ballarat எனும் இடத்திலிருந்து சிட்னியில் உள்ள பிரதமர் தேர்தல் அலுவலகம் வரை நடைபயணம் மேற்கொள்ளவுள்ளதாக்க குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் கடந்த எட்டு வருடங்களாக விசா ஏதும் இன்றி தனது மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு யுத்தம் காரணமாக நீல் பாரா 2008 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து வெளியேறி மலேசியாவுக்கு
 சென்றுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அவர் 2013 ஆம் ஆண்டில் குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவின் Ballarat இற்கு குடிபெயர்ந்துந்துள்ளதுடன், தற்காலிக வீசாவில் தங்கியிருப்பதற்கு அனுமதி 
வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த குடும்பம் சுமார் ஒன்பது ஆண்டுகளாக தங்களது வீட்டு வாடகை மற்றும் கட்டணங்களை செலுத்துவதற்கு ஏனையவர்களின் உதவியையே நாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, தமக்கு மாத்திரமன்றி தம்மைப்போன்று அவுஸ்திரேலியாவில் நிர்கதிக்குள்ளாகியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் நிரந்தர வதிவிடத்தை வழங்குமாறு வலியுறுத்தி தனிநபராக நடைப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். 
அத்துடன், பிரதமரிடம் வழங்குவதற்கான கோரிக்கை கடிதத்தில் 11,500 இற்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதன்படி, நீல் பாரா (Neil Para) நாளொன்றுக்கு சுமார் 30 கிலோமீற்றர் தூரம் பயணித்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஒன்பதாம் திகதி பிரதமரிடம் தனது கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை கையளிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.