பெற்றோல், டீசல் நிரப்பிய இரு கப்பல்கள் வங்கியில் நாணய கடிதம் திறக்காததால், துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. வங்கியில் நாணய கடிதம் திறக்காவிட்டால் அடுத்துவரும் 8 தினங்களுக்குள் நாட்டில் பெற்றோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இன்றையதினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில்,இம் மாதம் நாங்கள் செலுத்தவேண்டிய கடன் தொகையை செலுத்தியதன் பின்னர் எமது வெளிநாடடு கையிருப்பு முடிந்துவிடும்.
எமது வெளிநாட்டு கையிருப்பை அதிகரிப்பது தொடர்பில் நிதி அமைச்சரும் மத்திய வங்கி ஆளுநரும் கற்பனை கதைகளை தெரிவித்தாலும் அது வெறும் நகைச்சுவை மாத்திரமாகும்.மேலும் தற்போது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டிருக்கின்றது. 23 ஆம் திகதி மசகு எண்ணெய் வர இருக்கின்றது. ஆனால் இதுவரை அதற்கான வங்கி நாணய கடிதம் திறக்கப்படவில்லை.
எதிர்வரும் 15 ஆம் திகதியில் இருந்து நாடு மின்துண்டிப்பை நோக்கி செல்லும் என்பது மின்சாரசபை வட்டாரங்களின் தகவல்களில் இருந்து தெளிவாகின்றது.அதனால் அரசாங்கம் கற்பனை கதைகளை நிறுத்திவிட்டு, பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு வந்திருக்கும் எரிபொருள்
நிரப்பிய இரண்டு கப்பல்களையும் இறக்கிக்கொள்ளவேண்டும்.
சுத்திகரிப்பதற்கு தேவையான எண்ணெய்யை
விநியோகிக்க வேண்டும். மின்சாரசபைக்கு நிலக்கரி வழங்கவேண்டும். இந்த முறையான நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் மார்ச் மாதமாகும்போது நாடு பாரிய மின்சார பிரச்சினைக்கும் எரிபொருள் பிரச்சினைக்கும் செல்லும் என குறிப்பிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக