செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

மீள கையளிக்கப்படும் மயிலிட்டி துறைமுகம் ; மங்கள சமரவீர!

மயிலிட்டி – துறைமுகத்தை அடுத்த வருடத்திற்குள் பொதுமக்களிடம் மீளவும் கையளிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்ததாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் வடக்கிற்கு வந்து, நேரடியாக மக்களது பிரச்சினைகளை பார்க்கவில்லை என்றும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டே ஆட்சியை மேற்கொண்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் பிரிவினரின் வழிகாட்டல் நடமாடும் சேவை, நேற்று யாழ். நல்லூர் ஆலய பகுதியில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பின்னர் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் இவ்வாறு
 குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சியில் குறிப்பிடத்தக்க அளவு காணிகள் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த கால அரசாங்கத்தினால் எந்தவொரு நடவடிக்கையும் செய்யவில்லை என்றும் அவர் 
தெரிவித்துள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் விஷ ஊசி ஏற்றப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு அரசாங்கத்தினுடாக நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்துள்ளார்.
அத்துடன், இங்கே மூன்று நாட்கள் தங்கியிருந்து எமது மக்களின் பிரச்சனைகளை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளதுடன், வல்வெட்டித்துறை மயிலிட்டி பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்கின்ற மக்களை சென்று
 பார்வையிட்டிருந்தார்.
இதன்போது, மக்கள் படுகின்ற துன்பங்களை பார்த்து மிகவும் மனவேதனை அடைவதாக குறிப்பிட்டிருந்தார். மக்களுடைய பிரச்சினைகளை தனது தொலைபேசியில் படமெடுத்துள்ள அவர், இவற்றை நாடாளுமன்றத்திலே அனைவருக்கும் காண்பிக்க போவதாகவும் குறிப்பிட்டிருந்ததாகவும் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய நல்லாட்சி அரசாங்கமானது கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு நடாத்தப்பட்ட கொடுமைகளுக்கு பரிகாரம் செய்து கொண்டிருக்கின்றது.
அந்தவகையில் இந்த நல்லாட்சி அரசாங்கமானது மயிலிட்டி, துறைமுகத்தை விடுவிப்பதுடன், அப்பகுதிகளிலுள்ள மக்களது சொந்த காணிகளையும் மக்களிடம் மீளவும் கையளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதனூடாக ஆறு மாத காலங்களில் அம் மக்கள் தமது தொழில் துறைகளில் முன்னேற்றமடைந்து அரசாங்கத்திற்கும் பொருளாதார ரீதியில் பக்கபலமாக செயற்படுவார்கள்.
அத்துடன், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இழப்புக்களை சந்தித்த மக்களுக்கும் தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையிலும் தற்போது எழுந்துள்ள முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றியுள்ள விடயம் தொடர்பாகவும் உடனடியான தீர்வை வழங்கும் வகையில் நடமாடும் சேவைகளை வழங்கி அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க 
வேண்டும்.
அல்லது அவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் சிறுவர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.