நத்தார் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு இலங்கை முழுவதும் காவல்துறை, இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அது மாத்திரமின்றி சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் தொடர்பிலும் விசேட கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இம்மாதம் 16 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைமுறைக்கு வரும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கள் நத்தார் பண்டிகையின் போதும், புத்தாண்டு பிறப்பின் போதும் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களின் இவ்வாறான அன்றாட நடவடிக்கைகள் தொடர்பில் தீவிர கண்காணிப்பை முன்னெடுக்குமாறு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காவல்துறைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.இதன்போது சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாத நபர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அத்தோடு அதிக வேகத்தில் , கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துபவர்கள் தொடர்பிலும் கண்காணிப்புக்களை முன்னெடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் 24 மணித்தியாலங்களும் காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்கள் அதிகளவில் பொருட் கொள்வனவில் ஈடுபடக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும்.கொள்வனவு செய்யும் பொருட்களின் தரம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும், காரணம் சில வியாபாரிகளால் பாவனைக்கு உதவாத பொருட்கள் விற்பனை செய்யப்படக் கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அது மாத்திரமின்றி வாகனங்களை தரித்து நிறுத்தும் போதும் , மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். இவை தொடர்பில் கண்காணிப்பதற்காக புலனாய்வு பிரிவினர் உள்ளிட்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
குறிப்பாக பொருட்களை கொள்வனவு செய்யும் போது போலி நாணயத்தாள்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.பொது மக்கள் அதிகளவில் நடமாடும் இடங்களில் நடமாடும் காவல்துறை சேவை ஊடாக
கண்காணிப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன் போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி தரித்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை காவல்றை பொறுப்பிலெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை மாத்திரமின்றி தேவையேற்படின் இராணுவத்தினரின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ளுமாறும் ஆலோசனை
வழங்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக