வெள்ளி, 5 நவம்பர், 2021

நாட்டில் வெலிசர பகுதியில் 16 வயது இளைஞரால் ஏற்பட்ட பாரிய விபத்து

நாட்டில் வெலிசர பகுதியில்.05-11-2021. இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தை ஏற்படுத்திய மகிழுந்து, சந்தேக நபரான 16 வயது இளைஞரின் தந்தையினுடையது என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.எனினும் குறித்த இளைஞர் ஏன் தனது தந்தையின் மகிழுந்தை எடுத்துச் சென்றார் என்பதற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
மகிழுந்தின் உரிமையாளர் வெலிசர – மஹபாகே 
பகுதியில் தங்காபரண வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் தொழிலதிபர் ஒருவர் எனவும், அவர் இன்று காலை தனது மகிழுந்தை கழுவி சுத்தம் செய்து விட்டு, பணி நிமித்தமாகக் கொழும்பு செல்ல தயாரானதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேற்படி வர்த்தகர் பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தபோதே, குறித்த இளைஞர், தனது மூத்த சகோதரியுடன் வீட்டிலிருந்து பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர் எந்த தேவையும் இன்றியே வீட்டிலிருந்து மகிழுந்தை எடுத்துச்சென்றதாக இளைஞரின் தந்தை தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு திசையாக பயணித்த குறித்த மகிழுந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானது. அத்துடன், குறித்த மகிழுந்து வீதியின் நடுவில் உள்ள தடுப்பை கடந்து மறுபுறம் திரும்பி மற்றொரு காரின் மீது விழுந்ததாகச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.
விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.மஹபாகே பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ள நிலயில் , மற்றொருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த மகிழுந்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 16 வயதான இளைஞரை தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். அத்துதுடன், அவரது தந்தையையும் கைதுசெய்துள்ளதாக மஹபாகே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.